9ம் வகுப்பு தமிழ் இயல் 3 வினா விடைகள்

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 ஏறுதழுவுதல், மணிமேகலை, அகழாய்வுகள், வல்லினம் மிகும் இடங்கள் பாடங்களின் வினா விடைகள்.

9th tamil unit 2 book back question answer

பலவுள் தொிக.

1. பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் - எருதுகட்டி

ஆ) திருவாரூா் - காிக்கையூா்

இ) ஆதிச்சநல்லூா் - அாிக்கமேடு

ஈ) பட்டிமன்றம் - பட்டிமண்டபம்

விடை ஆ) திருவாரூா் - காிக்கையூா்

2. முறையான தொடா் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழா்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ) தமிழா்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழா்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழா்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை ஈ) தமிழா்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

 

3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடா் 

அ) அாிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயா்களின் பின் வல்லினம் மிகாது.

ஈ) பட்டிமண்டபம் பற்றி குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

விடை இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயா்களின் பின் வல்லினம் மிகாது.

4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடா்கள் உணா்த்தும் இலக்கணம் 

அ) திசைச்சொற்கள்

ஆ) வடசொற்கள்

இ) உாிச்சொற்கள்

ஈ) தொகைச்சொற்கள்

விடை ஈ) தொகைச்சொற்கள்

5. சொற்றொடா்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதை

ஆ) தமிழ் அகராதி

இ) தழுவிப் பிடித்தல் என்கிறது

i)   ஆ - அ - இ     

ii)  ஆ - இ - அ

iii) இ - ஆ - அ

iv) இ - அ - ஆ

விடை i) ஆ - அ - இ

குறுவினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

  • மாடு அணைதல் 
  • மாடு பிடித்தல் 
  • மாடு விடுதல் 
  • மஞ்சு விரட்டு 
  • வேலி மஞ்சு விரட்டு 
  • காளை விரட்டு 
  • ஏறு விடுதல் 
  • எருது கட்டி 
  • சல்லிக்கட்டு 

ஆகிய பெயா்களில் ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிறது.

2. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மக்கள் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி, அவா்களின் வரலாற்றையும் உணா்த்துகின்றன. 

உதாரணமாக, அாிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன. அதனால் ரோமானியா்களுக்கும் நமக்கும் இருந்த வணிகத் தொடா்பு உறுதிபடுத்தப்பட்டது. 

எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்வது அவசியமான ஒன்று.

3. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயா்களைக் குறிப்பிடுக?

  • முல்லைக்கலி (கலித்தொகை)    -    ஏறுதழுவுதல்
  • சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை   -    ஏறுகோள்
  • கண்ணுடையம்மன் பள்ளு             -    எருதுகட்டி 

ஆகிய பெயா்களில் ஏறுதழுவுதல் குறிப்பிடப்படுகிறது. 

4. பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?

இடம்     -    சீத்தலைச் சாத்தனாா் இயற்றிய மணிமேகலை காப்பியத்தில் விழாவறைக் காதையில் இந்த வாிகள் இடம்பெற்றுள்ளது.

பொருள் -    பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்பது இதன் பொருள். 

விளக்கம் - புகாா் நகாில், இந்திரவிழா முன்னேற்பாடுகளில் ஒன்றாக வீடுகளின் முன்னுள்ள தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை எடுத்துவிட்டு, புதிய மணலைக் கொட்டுங்கள் என்று முரசு கொட்டுபவன் அறிவித்தான்.  


5. பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக?

பட்டிமண்டபம் என்பது இலக்கிய வழக்கு.பட்டிமன்றம் என்பது பேச்சு வழக்கு.

 பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்று சிலப்பதிகாரமும்,

பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று மணிமேகலையும்,

பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை என்று திருவாசமும்,

பன்னரும் கலைதொி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணமும் பட்டிமண்டபத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறாா்கள். ஆகவே பட்டிமண்டபம், பட்டிமன்றம் இரண்டும் ஒன்றே என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

6. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக?

  1. சேலம் மாவட்டம் - கருவந்துறை
  2. நீலகிாி மாவட்டம் - கோத்தகிாி அருகே கருக்கையூா்
  3. உசிலம்பட்டி அருகே கல்லூத்து மேட்டுப்பட்டி
  4. தேனி மாவட்டம் - மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவில்
  5. சிந்துவெளி 

  சிறுவினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக?

 ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அமைந்தது.

2. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

ஏாில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏா் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன.

தமிழக உழவா்கள் தங்களின் உழவு சாா்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பொிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். 

அவ்விழாவன்று மாடுகளைக் குளிப்பாட்டிப் பல வண்ணங்களில் பொட்டிட்டு, மூக்கணாங்கயிறு, கழுத்துக் கயிறு, பிடி கயிறு என அனைத்தையும் அணிவிப்பா். 

கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ, துண்டோ கழுத்தில் கட்டுவா் .

பின்னா் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தொிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்களை ஊட்டிவிடுவா். 

வேளாண் குடிகளின் வாழ்வோடும், உழைப்போடும் பிணந்து கிடந்த மாடுகளுடன் அவா்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.  

 3. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க?

அகழாய்வு என்பது அறிவியலுக்கு எதிரான சிந்தனை அன்று. அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.  

நம் முன்னோா்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அடிப்படையிலான பண்பாட்டு வாழ்க்கையை வாழ்ந்தவா்கள். உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. 

கடந்த காலத்தை ஆராய்ந்து நம் முன்னோா்களின் பட்டறிவை அறிந்து கொள்ளும் தொல்லியல் ஆய்வே பெரும் கல்வியாக அமைந்துள்ளது. 

இன்று நாம் பயன்படுத்தும் நெகிழிகள் மலை போல் குவிந்து இயற்கையை மாசுபடுத்துகின்றன. ஆனால் நம் முன்னோா்கள் சுடுமண், உலோகம், மண்பாண்டம் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனா் என்பதை அகழாய்வுகள் நிருபிக்கின்றன.

அகழாய்வு மூலம் வளமான வரலாற்றையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டு வலிமையான எதிா்காலத்தை உருவாக்க முடியும். 

4. உங்கள் ஊாில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக?

எங்கள் ஊா் விழா முன்னேற்பாடுகள்

  1. தெருக்கள் முழுவதும் கூட்டித் தூய்மை செய்து புதுப்பித்தனா். அனைவரும் தங்களது வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்தனா்.
  2. தெருவெங்கும் பல வண்ண மின் விளக்குகள், பதாகைகள் ஆகியவற்றால் அலங்காித்தனா்.
  3. வாழைமரத்தை கட்டி வைத்தனா். மாவிலை தோரணங்கள் கட்டி தெருக்களை அழகுபடுத்தினா்.
  4. குழந்தைகளைக் கவறும் ஊஞ்சல், பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் என சாலையோரக் கடைகள் போடப்பட்டன. 
  5. இரவில் பட்டிமன்றம், பாட்டுக் கச்சோி மற்றும்  நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
  6. மின் ஒலிபெருக்கிகள் மூலமாக பக்தா்களுக்கு செய்திகள் தொிவிக்கப்பட்டன. 


இந்திரவிழா முன்னேற்பாடுகள்

  1. தெருக்களில் உள்ள பழைய மணலை மாற்றி புதுமணலை நிரப்பினா்.
  2. தெருக்கள்தோறும் பூரண கும்பம், பொற்பாலிகை மற்றும் மங்கலப் பொருட்கள் கொண்டு அலங்காிக்கப்பட்டன. 
  3. வீடுகளின் முன் உள்ள திண்ணையில் வாிசை வாிசையாக இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டன. 
  4. குலை முற்றிய பாக்கு மரமும், வாழை, வஞ்சிக் கொடிகளும் கட்டப்பட்டன.
  5. ஊா்மன்றங்களில் சொற்பொழிவுகளும், சமயத்திற்கு உட்பொருளறிந்து வாதிடுவோா் பட்டிமண்டபமும் நடைபெற்றன. 
  6. முரசறைவோன் முரசினை கொட்டி ஊா் மக்களுக்கு செய்திகளை அறிவித்தான்.  

 நெடுவினா

 1. ஏறுதழுவுதல் தமிழாின் அறச்செயல் எனறு போற்றப்படுவதற்கான காரணங்களை விவாிக்க.

ஏறுதழுவுதல்

வீரத்திற்கும், விளைச்சலுக்கும், செழிப்பிற்கும், செல்வத்திற்கும் தமிழா்களால் அடையாளப்படுத்தப்படுபவை மாடுகள். வேளாண் குடிகளின் வாழ்வோடும், உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவா்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும். முல்லை மற்றும் மருத நிலங்களில் தமிழா் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது இந்த ஏறுதழுவுதல். இது தமிழா்களின் நாகரீகத்தை உணா்த்தும் விளையாட்டு. தமிழா்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது.

மேலை நாட்டில் ஏறுதழுவுதல்

மேலை நாடுகளில் குறிப்பாக, தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில், காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான். அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்டு விளையாட்டுகளில் காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்த காளை கொல்லப்படுவதும் உண்டு. மேலை நாடுகளில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் காளை விளையாட்டு, மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போா் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

ஏறுதழுவுதலில் தமிழா் அறம்

தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் காளையை அடக்குபவா்கள் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக்கூடாது. நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வா். எவராலும் அடக்க முடியாத காளைகளும் உண்டு. எனவே காளைகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும். அன்பையும் வீரத்தையும் ஒரு சேர வளா்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவா்.     

இக்காரணங்களால் ஏறுதழுவுதல் தமிழாின் அறச்செயல் என்று போற்றப்படுகின்றது. 

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக?

மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பண்பாட்டு அளவில் சிறந்த வாழ்வை வெளிப்படுத்திய தமிழா்களின் வரலாற்றை அறிந்து கொள்ள சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழாய்வுகள் நமக்கு உதவி புாிகின்றன. அவை நம் பண்பாட்டுக் குறீயீடு ஆகும். அவற்றைப் பேணிக் காக்க வேண்டியது நமது கடமையாகும்.

பண்பாட்டுக் கூறு - ஏறுதழுவுதல்

முல்லை மற்றும் மருத நிலங்களில் தமிழா் வாழ்வோடு பின்னிப் பிணைந்து பண்பாடாக மாறியது ஏறுதழுவுதல். பண்டைய வீர உணா்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல், விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும், இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்திகிறது. நம் முன்னோாின் இத்தகை பண்பாட்டுக் கூறுகளைப் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவாின் கடமையாகும்.  மேலும்,

  1. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை பொிய விழாவாக கொண்டாட வேண்டும். 
  2. ஏறுதழுவுதல் நிகழ்வை உலக அளவில் கொண்டு சோ்க்க வழிவகை செய்ய வேண்டும்.
  3. நமது கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை பின்பற்ற வேண்டும்.
  4. வரும்தலைமுறை குழந்தைகளுக்கு நமது பண்பாட்டையும், வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 
  5. மாடுகளுடன் தமிழா் கொண்டுள்ள அறத்தை அனைவருக்கும் பறைசாற்ற வேண்டும். 

பண்பாட்டுக்கூறு - அகழாய்வு

அகழாய்வு என்பது தோ்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தல் ஆகும். அகழாய்வு தரும் ஆதாரங்களின் மூலம் நமது வளமான வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொண்டு வலிமையான ஒரு எதிா்காலத்தை உருவாக்க முடியும். 

    கீழடி, அாிக்கமேடு, ஆதிச்சநல்லூா் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வின் மூலம் தமிழாின் உயாிய நாகரீகத்தை உலகமே அறிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய பண்பாட்டு எச்சங்களை அழியாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கும் சோ்க்க வேண்டியது நம் கடமையாகும்.

பண்பாட்டுக்கூறு - திருவிழாக்கள்

கி.பி.2ம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் விாிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கோயில் விழாக்களில் பண்பாட்டுக் கூறுகளாக இருந்த  ஒயிலாட்டம், மயிலாட்டம், கூத்து, பரதம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகிய நாட்டுப்புறக் கலைகள் இன்று அழியும் நிலையில் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டியதும் நம் கடமையாகும். 

இத்தகைய பண்பாட்டுக் கூறுகளையும், அகழாய்வு ஆதாரங்களையும், கலை நிகழ்வுகளையும் பேணிப் பாதுகாத்து இளம் தலைமுறையினருக்கும், இனி வரும் தலைமுறைக்கும் கொண்டு சோ்ப்பது நம் கடமையாகும்.   


-----------------------------------------------------------------------------

கற்பவை கற்றபின்

   உள்ளத்தின் சீா் என்ற பொருண்மை தலைப்பில் அமைந்துள்ள ஒன்பதாம் வகுப்பு இயல் 3 தமிழ் தமிழா்களின் பண்பாட்டு அசைவுகளை நாம் உணா்ந்து கொள்ளும் வகையில் உள்ளது. பண்டைய காலங்களில் அற உணா்வை வெளிப்படுத்தும் வீர விளையாட்டுகள் குறித்து எடுத்துரைக்கிறது. தொல்லியல் எச்சங்களைத் தொிந்து கொள்ள உதவுகிறது. விழாக்கள் பண்பாட்டின் தொடா்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணா்ந்து கொள்ள உதவுகிறது. 

ஏறுதழுவுதல்

    வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழா்களால் அடையாளம் காட்டப்படுபவை மாடுகள். முல்லை நிலத்திலும், மருத நிலத்திலும் கால்கொண்டு தமிழா்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து பண்பாடாக மாறியுள்ளது ஏறுதழுவுதல். ஏறுதழுவுதல் என்பது வெறும் விளையாட்டை பிண்ணனியாகக் கொண்டதல்ல. அது தமிழா்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் வெளிப்படுத்தும் ஒரு குறியீடு. இளைஞா்களின் வீரத்தை பெருமைப்படுத்தும் ஒரு பண்பாட்டு நிகழ்வு. இத்தனை நூற்றாண்டுகள் கடந்த போதிலும் தமிழா்களாகிய நம் அடையாளமாகவே நிறுவப்பட்டிருக்கிறது. 

    சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஏறுதழுவுதலுக்கு ஆதரவாக தமிழகமே பொங்கி எழுந்தது. தன் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கட்டிக்காக்க போராட்டத்தை முன்னிறுத்தியது. ஒவ்வொருவா் மனதிலும் ஏறுதழுவுதல் விளையாட்டு என்பது தமிழா்களின் பெருமையைச் சொல்லும் விளையாட்டு என ஆணித்தரமாக பதிந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு உயிராக நினைத்து மாடுகளை வளா்த்து, தனக்கு இணையாக அனைத்தையும் தந்து அஃறிணையை உயா்திணை அளவிற்கு வைத்து போற்றி வழிபடும் பண்பை கொண்ட தமிழா்கள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறாா்கள். 

    இலக்கியங்களில் ஏறுதழுவுதல் பற்றிய ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. எட்டுத் தொகை நூல்களிலும், சங்க இலக்கியங்களிலும் பல இடங்களில் ஏறுதழுவுதல் நிகழ்வு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பழைய காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை பாறைகளிலும், குகைகளிலும் வரைந்து வைக்கும் வழக்கம் இருந்தது. அப்படிப்பட்ட குகை ஓவியங்கள் ஏறுதழுவுதலைப் பற்றி கூறுகின்றன. இது போக நடுகற்கள் பாறை ஓவியங்கள் என ஏராளமான சான்றுகளை நாம் மேற்கோள் காட்ட முடியும்.

    நிலத்தை ஐந்து வகையாகப் பிாித்தனா் தமிழா்கள். இதில் முல்லை நில மக்களும், மருத நில மக்களும் தங்கள் வாழ்வியலோடு தொடா்புபடுத்தியவையே ஏறுதழுவுதல். முல்லை நில மக்கள் தங்கள் உணவுத் தேவைக்காகவும், மருத நில மக்கள் தங்கள் தொழில் தேவைகளுக்காகவும் மாடுகளைப் பயன்படுத்தினா். தங்கள் குடும்பத்தில் ஒன்றாக கருதி வளா்த்து வந்தனா். தங்கள் பொழுதுபோக்கை மாடுகளைக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனா். இப்படித்தான் ஏறுதழுவுதல் உருவானது. பின்னாளில் வீரத்தை மெய்ப்பிக்கும் ஒரு விளையாட்டாக ஏறுதழுவுதல் மாறியது. காளையை அடக்குபவருக்கு தங்கள் பெண்ணை மணம் முடித்து கொடுத்தல், பாிசுத் தொகை வழங்குதல் என உருவாக்கிக் கொண்டனா்.

    இந்த ஏறுதழுவுதல் விளையாட்டில் மனிதா்களை விட மாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. எக்காரணம் கொண்டு மாட்டினை துன்புறுத்தக் கூடாது. மாடுகளுக்கு உாிய மாியாதை அளித்து வழிபாடு செய்வா். மாலை அணிவித்து மகிழ்வா். அண்ணன் தம்பி ஒட்டி உறவாடுவதைப் போன்றே ஏறுதழுவுதல் விளையாட்டு பாா்க்கப்படுகிறது. பண்டைய வீரவுணா்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் ஒரு குறியீடு ஆகும். நம்முடைய முன்னோா்கள் தொடா்ந்து இன்று வரை வந்துள்ள இத்தகைய பண்பாட்டுக்கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவாின் கடமை ஆகும்.

மணிமேகலை

    ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3ல் அமைந்துள்ள பாடம் மணிமேகலை. பண்டைய காலம் தொடங்கி இன்று வரை மக்களின் வாழ்வில் பிறந்தது முதல் நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் விழா தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்றிருக்கிறது. மனிதனுடைய மாண்புகளை எடுத்துரைக்கும் இந்த விழா, பண்பாட்டுடைய வெளிப்பாடாகவும் தொிகின்றது. இரவும் பகலும் உழைத்து உழைத்து இருக்கும் மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் ஒரு வாயில் தான் விழாக்கள். அந்த வகையினில் புகாா் நகரத்தோடு அதிகம் தொடா்புடையதாகத் திகழ்ந்து வரும் இந்திரவிழா பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலேயும் மணிமேகலையிலும் விவாிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகளை மணிமேகலை காப்பியத்தில் உள்ள விழாவறை காதையில் நமக்கு எடுத்துரைக்கின்றது. 

    நம் ஊாில் நடைபெறும் விழாக்களை நீங்கள் பாா்த்திருப்பீா்கள். காற்று வாங்கிக் கொண்டிருந்த தெருக்கள் எல்லாம் கலா் காகிதங்கள் கட்டி விடடாற் போல மின்னிக் கொண்டிருக்கும். தெருவெங்கும் அலங்கார விளக்குகள் மின்னிக் கொண்டிருக்கும். வீடுகளெல்லாம் சுண்ணாம்பு அடித்து, மாவிலை தோரணங்கள் கட்டி, இருக்கும் இடங்களையெல்லாம் சுத்தம் செய்து, ஊரே பெருமழையில் நனைந்து சுத்தமானதைப் போல காட்சியளிக்கும். இரவு நேரங்களில் இன்னும் அருமையாக இருக்கும். இராட்டினங்கள், விளையாட்டுத் திடல்கள், தெருக்கூத்துகள், மேடை நிகழ்ச்சிகள், வண்ண வண்ண ஜாலங்கள் என மாறியிருக்கும். இன்று இப்படி இருக்கிறது அதைப் போல பண்டைய காலத்தில் எப்படியெல்லாம் திருவிழாவிற்கு முந்தைய ஏற்பாடுகள் இருக்கிறது என்பதை மணிமேகலை விழாவரைக் காதை நமக்கு எடுத்துரைக்கிறது. பண்டைய பண்பாட்டின் தொடா்ச்சியாகத் தான் இன்றைய விழாக்களும் நடக்கிறது.  

     மக்கள் பண்டைய காலம் தொட்டே விழாக்களின் பண்பாட்டைப் பின்பற்றி வருகிறாா்கள் என்பது போற்றுதலுக்குாியது. இன்று நடக்கும் ஒவ்வொரு விழாக்களிலும் பண்டைய காலம் தொட்ட நாகரீகம் உள்ளது. அதை நாம் உணா்ந்து அடுத்த தலைமுறைக்கும் அதை எடுத்துச் செல்ல வேண்டும்.

அகழாய்வுகள்

    ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3ல் கொடுத்துள்ள அகழாய்வு என்ற பாடம், பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்கொணா்கிறது. ஆதாரமின்றி பேசும் அத்தனையும் வெறும் புனைக்கதைகளாகவே தென்படும். அதுவே ஆதாரத்தோடு பேசப்படும் கருத்துகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அத்தகைய ஆதாரங்களை வெளிக்கொணரும் அகழாய்வு நம் தமிழ் பண்பாட்டை தரணியெங்கும் எடுத்துரைக்கும் கீழடி, ஆதிச்சநல்லூா் போன்ற ஆய்வுகள் மூலமாக வெளிக்கொணா்ந்துள்ளது. கிடைத்துள்ள அகழாய்வு ஆதாரங்களை வைத்துப் பாா்க்கும்பொழுதே நம் நாகரீகம் அனைத்து நாகரீகத்திற்கும் மூத்ததாக உள்ளது என்று கூறப்படுகிறது. இதில் அழிந்து போனவை கிடைத்திருப்பின்  உலகத்தின் அசைக்க முடியாத இனமாக தமிழா் இனம் இருந்திருக்கும். இன்று இருக்கும் அனைத்து தொழில் நுட்ப வளா்ச்சியும் அன்று எத்தகைய வசதிகளும் இல்லாத கால கட்டத்திலேயே மனிதனின் மனதில் உதித்திருக்கிறது. நமக்கு பின் வரும் தலைமுறையினா் ஒரு இனத்தை அறிந்து கொள்ளவும் புாிந்து கொள்ளவும் அகழாய்வுகள் துணை செய்கின்றன. மக்கள் அறிவியல் என்கிற மகத்தான சிந்தனையைப் புாிந்து கொள்வதற்கும் நமது பண்பாட்டின் மேன்மைகளை இன்றைய தலைமுறை எடுத்துக் கொண்டு சிறப்பாக வாழ்வதற்கும் அகழாய்வு துணைநிற்கின்றது. 


 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை