மனதார மனமார எந்தச் சொல் சரி? (தமிழ் இலக்கணம் 4)

மனதார மனமார எந்தச் சொல் சரி?


தமிழ் இலக்கணம் - 4


    ஆர, ஆற இவ்விரண்டு சொற்களின் பொருள் தெரிந்து கொண்டால் இடம் அறிந்து பயன்படுத்துவது எளிது.

ஆர - நிறைய, மிகுதியான 

ஆற - தணிய, குறைய 

என்று பொருள்.

இங்கு சில பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சரியான விடை அளிக்க முயலுங்கள். 

1. மன்னர், மக்கள் (பசியாற / பசியார) உணவளித்தார்.

2. மக்கள் தங்கள் (வயிறாற  வயிறார) உணவு உண்டனர்.

3. பசியாறிய மக்கள் மன்னரை (வாயார / வாயாற) வாழ்த்தினர்.

4. ஆக்கப் பொறுத்தவன் (ஆறப் / ஆரப்) பொறுக்க வேண்டும்.

5. (ஆற / ஆர) அமர உட்கார்ந்து யோசி

6. மகனின் பெருமையை ஊரர் கூறுவதைக் (காதார/காதாற) கேட்டு மகிழ்ந்தாள் அன்னை.

7. மன்னரின் (சினமாற/ சினமார) அமைச்சர்கள் காத்திருந்தனர்.

8. அன்பு மிகுதியில் தம்பியை (ஆரத்/ஆறத்)  தழுவினான் அண்ணன்.

9. (ஆறாப் / ஆராப்) புண்ணும் உண்டோ?

10. என் (உளமாற / உளமார) உறுதி அளிக்கின்றேன்.

11. தன் குழந்தை குறும்பை (கண்ணார/ கண்ணாற)  கண்டு இரசித்தார் அப்பா.








விடைகள்-



1. மன்னர், மக்கள் (பசியாற / பசியார) உணவளித்தார்.

(பசியாற என்றால் பசி குறைய என்று பொருள்)


2. மக்கள் தங்கள் (வயிறாற  வயிறார) உணவு உண்டனர்.

(வயிறார என்றால் வயிறு நிறைய என்று பொருள்)


3. பசியாறிய மக்கள் மன்னரை (வாயார / வாயாற) வாழ்த்தினர்.

(வாயார என்றால் வாய் நிறைய என்று பொருள்)


4. ஆக்கப் பொறுத்தவன் (ஆறப் / ஆரப்) பொறுக்க வேண்டும்.

(மனிதருக்கு பொறுமை அவசியம் என்பதை உணர்த்தும் பழமொழி இது. இங்கு ஆற என்றால் தணிய, குறைய என்று பொருள்)


5. (ஆற / ஆர) அமர உட்கார்ந்து யோசி

(கோபமோ, பதட்டமோ எதுவாகினும் அது தணிந்தபின் அதாவது குறைந்த பின் யோசி என்பதே இந்தத் தொடரின் பொருள்)


6. மகனின் பெருமையை ஊரர் கூறுவதைக் (காதார/காதாற) கேட்டு மகிழ்ந்தாள் அன்னை.

(நற்சொற்களை காது நிறைய கேட்டு மகிழ்ந்தாள் அன்னை)


7. மன்னரின் (சினமாற/ சினமார) அமைச்சர்கள் காத்திருந்தனர்.

(மன்னரின் சினம் குறைய காத்திருந்தனர்)


8. அன்பு மிகுதியில் தம்பியை (ஆரத்/ஆறத்)  தழுவினான் அண்ணன்.

(தழுவுதல் என்றால் அன்பாக அணைத்துக் கொள்ளுதல் என்று பொருள். ஏறு தழுவுதல் என்ற சொல்லிற்கு மாட்டினை அன்பாக அணைத்தல் என்றே பொருள். 
    ஆரத் தழுவினான். இலக்கியங்களில் பயின்று வந்த வார்த்தை இவை. பொதுவாக தழுவுதலைத் தாண்டி, அன்பு மிகுதியில் அதிகம் கட்டியணைத்துக் கொண்டான் என்பது பொருள்)


9. (ஆறாப் / ஆராப்) புண்ணும் உண்டோ?

(ஆறாதப் புண்ணும் உண்டோ)


10. என் (உளமாற / உளமார) உறுதி அளிக்கின்றேன்.

(உள்ளம் என்பதன் இடைக்குறுகலே உளம். இங்கு உளமார என்றாலும் மனமார என்றாலும் ஒரே பொருள்தான். உள்ளம் நிறைய உறுதி அளிக்கின்றேன் என்பதே இதன் பொருள்)


11. தன் குழந்தையின் குறும்பை (கண்ணார/ கண்ணாற)  கண்டு இரசித்தார் அப்பா.

(கண்கள் நிறைய கண்டு இரசித்தார் அப்பா)


    இந்தப் பதிவில் இருந்து நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டிருந்தால் உங்கள் மேலான கருத்தையும், எதையேனும் நாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் உங்கள் ஆலோசனையும் வழங்கினால் பேருதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி🙏

Comments

Post a Comment

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

தமிழ் இலக்கணம் தலைப்புகள்

பேச்சுமொழியை இப்படி எழுத்துமொழியா மாத்தலாம் (தமிழ் இலக்கணம் 3)