இத்தனை அழகான எண்ணுப்பெயர்கள் நம்மொழியிலா?
இவ்வளவு அழகான எண்ணுப்பெயர்கள் நம்மொழியில் இருக்கின்றனவா?
தமிழ் இலக்கணம் 5
எண்ணுப்பெயர்களோடு சேர்ந்து வரும் நபர் என்ற சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். ஆனால் நபர் என்ற சொல் அரபு மொழியைச் சேர்ந்தது. எழுத்து வழக்கிற்கும் அவற்றை பயன்படுத்துவது சிறப்புடையதாக இருக்காது. ஆகவே கீழ்க்காணும் பத்தியில் உள்ள அரபு மொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களில் மாற்றி அமையுங்கள். விடைகள் கடைசியாகத் தரப்பட்டுள்ளன.
இதுசார்ந்த காணொலி ஒன்றையும் பதிவிட்டுள்ளேன். நீங்கள் பார்க்க விரும்பினால் CLICK HERE
பயிற்சி வினா
புகழ்பெற்ற அந்நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் செய்தனர். பல பேர் விண்ணப்பம் பெற்றுச் சென்றனர். ஆனால் நிறுவனமோ எட்டுப் பேர் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறியது. இருப்பினும், தகுதியான நபர்கள் இருக்கும் பட்சத்தில் பத்துப் பேர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. பல பேர் வேலைக்கு விண்ணப்பித்தனர். சில பேர் விலகிக் கொண்டனர். பணியாளர்களைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட குழு அமைத்த நிறுவனம், ஒன்பது பேரை இறுதித் தேர்வுக்கு அழைத்தது. அவர்களில் இரண்டு நபர்கள் தவிர மீதமுள்ள ஏழு நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள்.
விடைகள் வீழே தரப்பட்டுள்ளன. விடைகளைப் பார்க்காமல் நீங்கள் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இப்பொழுது விடைகளைப் பார்த்து நீங்கள் கணித்தவை சரிதானா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
விடைகள்
புகழ்பெற்ற அந்நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் செய்தனர். பலர் விண்ணப்பம் பெற்றுச் சென்றனர். ஆனால் நிறுவனமோ எண்வர் மட்டுமே நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறியது. இருப்பினும் தகுதியானவர்கள் இருக்கும் பட்சத்தில் பதின்மர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. பலர் வேலைக்கு விண்ணப்பித்தனர். சிலர் விலகிக் கொண்டனர். பணியாளர்களைத் தேர்வு செய்ய ஐவர் குழு அமைத்த நிறுவனம், ஒன்பதின்மரை இறுதித் தேர்வுக்கு அழைத்தது. அவர்களில் இருவர் தவிர மீதமுள்ள எழுவர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் மூவர் ஆண்கள் நால்வர் பெண்கள்.
சரியான விடைகளைத் தெரிந்து கொண்டீர்களா? நீங்களும் இந்த விடைகளைக் கணித்திருந்தால் மிக அருமை. இதுபோல் இன்னும் சில தொடர்கள் கீழே கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் அவற்றையும் முயற்சி செய்து பாருங்கள்.
மேற்கண்ட தொடர்களுக்கான விடைகளை நீங்களே கண்டுபிடியுங்கள். இதுகுறித்த விரிவான காணொலிக்கான இணைப்பும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் பார்க்கலாம். இந்தப் பதிவின் மூலம் நீங்கள் புதிதாக ஏதேனும் தெரிந்திருந்தாலோ, ஏதேனும் குறையாகத் தென்பட்டிருந்தாலோ உங்கள் மேலான கருத்தினை பதிவிடவும். அது மேலும் என்னை மேம்படுத்திக் கொள்ள துணைபுரியும் என்று நம்புகின்றேன்.
Comments
Post a Comment