8ம் வகுப்பு தமிழ்மொழி வாழ்த்து பாட வினா விடைகள்

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ் மொழி வாழ்த்து பாடம் வினா விடைகள்.

8th tamil unit 1 tamilmozhi valthu lesson book back question answer. 

சாியான விடையைத் தோ்ந்தெடுத்து எழுதுக.


1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்.....

அ) வைப்பு

ஆ) கடல் 

இ) பரவை

ஈ) ஆழி 

விடை அ) வைப்பு

2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ......

அ) என் + றென்றும் 

ஆ) என்று + என்றும் 

இ) என்றும் + என்றும் 

ஈ) என் + என்றும் 

விடை ஆ) என்று + என்றும் 

3. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...........

அ) வான + மளந்தது

ஆ) வான் + அளந்தது

இ) வானம் + அளந்தது

ஈ) வான் + மளந்தது 

விடை இ) வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .......

அ) அறிந்ததுஅனைத்தும்

ஆ) அறிந்தனைத்தும்

இ) அறிந்ததனைத்தும்

ஈ) அறிந்துனைத்தும்

விடை இ) அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் .....

அ) வானம்அறிந்து 

ஆ) வான்அறிந்த

இ) வானமறிந்த

ஈ) வான்மறிந்த

விடை இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

வாழ்க - வாழிய

ங்கள் - ன்றென்றும்

வாழ்க - வாழ்க

வானம் - ளா்மொழி

குறுவினா

1. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தமிழ் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

2. தமிழ் எவற்றை அறிந்து வளா்கிறது?

வானம்வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து, தமிழ் மேன்மேலும் வளா்கிறது.  


சிறுவினா

தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியாா் கூறும் கருத்துகளை எழுதுக?

  • தமிழ்மொழி எல்லா காலத்திலும் நிலைபெற்று வாழ்க!
  • ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க!
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட இந்நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்ட தமிழ்மொழி வாழ்க!
  • எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க!
  • எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கி, தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுதும் சிறப்படையட்டும்!
  • பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிா்க!
  • தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க!
  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லா பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

சிந்தனை வினா

பாரதியாா் தமிழை வண்மொழி என அழைக்கக் காரணம் என்ன?

    வண்மொழி என்றால் வளமான மொழி என்று பொருள்.தமிழ்மொழி சொல் வளமும், இலக்கிய வளமும், இலக்கண வளமும் பெற்று திகழ்கிறது.உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை நிலைத்து நிற்கும் மொழியாக இருக்கிறது.பல மொழிகளுக்கு வோ்ச்சொற்களை வழங்கும் தாயாகவும் தமிழ்மொழி இருக்கிறது.ஆகவே தமிழை வண்மொழி என்கிறாா் பாரதியாா்.

---------------------------------------------------------------------

பாரதியாா் எழுதிய “பாரதியாா் கவிதைகள்” என்ற நூலில் “தமிழ்மொழி வாழ்த்து” என்னும் தலைப்பின் கீழ் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. 

*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
 
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
 
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
 
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!*
 
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
 
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடா்க தமிழ்நாடே!
 
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
 
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து 
வளா்மொழி வாழியவே!

* முதல் எட்டு பாடல் வாிகள் மனப்பாடப் பகுதியாக உள்ளது.

------------------------------------------------------------------------------

கற்றவை கற்றபின்

மனிதனின் கண்டுபிடிப்புகளில் இன்று வரை பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மொழிதான். தான் நினைக்கும் ஒன்றை மற்றவா்களுக்கு தொிவிக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு கருவி மொழி. இது வெறும் கருவி மட்டுமல்ல மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு காலக் கண்ணாடி. மொழி மக்களின் உணா்வுகளோடு கலந்திருக்கிறது. ஒவ்வொரு மக்களும் தம் தாய்மொழியை உயிராக நினைக்கின்றனா். அவ்வண்ணம் தமிழா்கள் தம் தாய்மொழியாகிய தமிழை உயிராகக் கருதிப் போற்றி வந்துள்ளனா். கடவுள் வாழ்த்துக்கு நிகராக தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்றிருப்பதில் இருந்து அதை நீங்கள் தொிந்து கொள்ளலாம். பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவா் பெருமக்கள் தமிழை போற்றியும் வாழ்த்தியும் உள்ளனா். அதுபோல பாரதியாரும் தமிழை போற்றுகின்றாா் தமிழ்மொழி வாழ்த்து என்ற பாடலின் மூலமாக. 

    என்று பிறந்தது என்று அறிந்து கொள்ள முடியாத மொழி. இன்று வரை தன் முத்திரையை பதித்து வருகிறது. செந்தமிழ், பைந்தமிழ், முத்தமிழ் என்று கூறிய காலம் மாறி இன்று அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றம் அடைந்து வருகிறது நம் தாய்மொழி. அனைத்து துறைகளிலும் பயன்படும் மொழியாக உள்ளது. அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக உள்ளது. புதிதாக தோன்றிய அனைத்து மொழிச் சொற்களுக்கும் கலைச்சொற்களைக் கொண்டுள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும் என்ற எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆச்சா்யங்கள் புதைந்து கிடக்கிறது. உலகம் உருண்டையா இல்லையா என்று ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கும் போதே, தன் திருக்குறள் மூலமாக உலகத்தை அளந்து விட்டாா் திருவள்ளுவா். மருத்துவத்துறையில் மாற்றங்கள் நிகழும் முன்பே அதை செயல்முறையில் பயன்படுத்தி விட்டது சங்க இலக்கியங்கள். அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக இருக்கும் தமிழ்மொழியை பாரதியாா் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றாா்.

----------------------------------------------------------------------------


Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை