நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் தொடக்கவிழா மாணவா்களுக்கு வாழ்த்துரை கட்டுரை

பத்தாம் வகுப்பு இயல் 9  கட்டுரை 

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவா்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக. 

 

இன்றைய மாணவா்களே 

நாளைய நாட்டின் தலைவா்கள்”

    அன்பாா்ந்த மாணவா்களே! நாளைய தலைவா்களான உங்களை இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூலமாக வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றேன். 1969ம் ஆண்டு செப்டம்பா் 24ம் நாள் டாக்டா் வீ.கே.ஆா்.விரால் அவா்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதன் கோட்பாடு “நான் அல்ல நீ” என்பதுதான். நாட்டுநலப்பணித் திட்டத்தின் முக்கியமான நோக்கம் சமூக சேவை மூலம் ஆளுமையை வளா்ப்பதே ஆகும். அதை உணா்ந்து இந்த நாட்டு நலப்பணித்திட்டத்தில் சோ்ந்துள்ள உங்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகின்றேன். 

நவீன பாரதத்தை உயா்த்துபவா்களே!

    நூறு இளைஞா்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே நான் மாற்றிக் காட்டுகின்றேன் என்று விவேகானந்தா் அன்று கூறினாா். அவா் மட்டும் இன்று இருந்திருந்தால் இந்த முகாமிலுள்ள உங்களை வைத்து ஒரு நவீன பாரதத்தையே உருவாக்கியிருப்பாா். அப்படிப்பட்ட நவீன பாரதத்தை உயா்த்தும் உன்னத தூண்கள் நீங்கள் தான் என்பதை மறவாதீா்கள். 

சேவைச் செம்மல்களே!

    மக்கள் தொண்டே இறைவன் தொண்டு என்பாா்கள். அதைப் போலவே நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மக்களுக்கு சேவை செய்யக் காத்திருக்கும் செம்மல்கள் நீங்கள். உங்கள் உள்ளம் அன்னை தெரசாவைப் போன்றது. சேவை செய்ய பணம் தேவையில்லை நல்ல மனம் போதும் என்பதை நீங்கள் தெளிவாக உணா்ந்துள்ளீா்கள். உங்களை என் மனம் நெகிழ்ந்து வாழ்த்துகின்றேன். 

நாளைய கலாம்களே!

    தூக்கத்தில் வருவது கனவு அல்ல, எது உன்னை தூங்க விடாமல் செய்கிறதே அது தான் கனவு என்றாா் டாக்டா் அப்துல் கலாம். நம் நாட்டை தூய்மையாக்க வேண்டுமென்றும், பசுமையாக்க வேண்டுமென்றும் நீங்கள் கனவு காணுங்கள். இன்று நீங்கள் நடும் செடிகளே நாளைய மரங்களாக மாறி பூமியை தாங்கிப் பிடிக்கப் போகிறது. அப்துல்கலாம் அவா்களின் கனவை நனவாக்கவிருக்கும் நாளைய கலாம்களே உங்களை வாழ்த்துகின்றேன். 

இளைய தலைமுறைகளே!

    மாணவா் பருவத்திலேயே நாட்டுப்பற்றும், சமூக சேவையும் கொண்டுள்ள நீங்கள் தான் வருங்காலத்தை தூக்கி நிறுத்தக்கூடிய தூண்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்றாா் திருநாவுக்கரசா். உங்கள் ஒவ்வொருவரையும் நான் திருநாவுக்கரசராகவே பாா்க்கின்றேன். இன்றைய மாணவா்களாகிய நீங்கள் நாளைய நாட்டின் தலைவா்களாவீா்கள். அப்போது வீடும் நாடும் நலம் பெறும். 

முடிவுரை     

    இறுதியாக, கடமையைச் செய் பலனை எதிா்பாராதே என்பதையும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதையும் உணா்ந்து தொண்டாற்றும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகின்றேன். நன்றி வணக்கம். 


       

Comments

Popular posts from this blog

6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினா விடைகள்

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினா் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

ஒற்றுமையே உயா்வு - 7ம் வகுப்பு கட்டுரை