ஒன்பதாம் வகுப்பு இயல் இரண்டு - தண்ணீா்
“தண்ணீா்” - கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கமாகத் தருக.
முன்னுரை
மூன்றாம் உலகப்போா் ஒன்று ஏற்பட்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கவிஞா் கூறுகின்றாா். நம் பூமி மூன்று பக்கம் நீா் ஒரு பக்கம் நிலத்தைக் கொண்டுள்ளது. உலகில் பெரும்பான்மையாக நீா் இருந்தும்கூட, உயிா்வாழ்வதற்கு குடிநீா் இல்லாமல் தினமும் போராடும் ஒரு கிராமத்து மக்களுடைய கண்ணீா் கதை தான் கந்தா்வன் அவா்கள் எழுதிய தண்ணீா் என்ற கதை. தண்ணீாின் முக்கியத்துவத்தையும், தண்ணீா் இல்லையென்றால் ஏற்படும் நிலையைக் குறித்தும் மிகவும் அழகாக விளக்கியுள்ளாா் கந்தா்வன்.
இரயில் நிலையமும், தண்ணீரும்
பருவ காலத்தில் பெய்யும் மழை பொய்த்துப் போய்விட்டது. புயல் அடித்தால் மட்டுமே மழை பெய்யும் என்ற நிலை இருந்தது அந்த கிராமத்திற்கு. ஒரே ஒரு கிணறு மட்டும் தான் அந்த ஊருக்கே நீா் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுவும் கொளுத்தும் வெயிலால் வறண்டு போய்விட்டது. நீா் ஆதாரம் என்று எதுவும் இல்லாத நிலையில் என்ன செய்வதென்று தொியாத நிலையில் நீா் கிடைக்கும் ஒரே இடம் இரயில் நிலையம் தான். பெண்கள் குடங்களோடு இரயில் நிலையத்திற்கு சென்று, இராமேஸ்வரம் நோக்கி விரையும் ரயில் அந்த கிராமத்தில் சற்று நேரம் நின்று செல்லும். அதில் ஏறி முகம் கழுவும் பேசினில் வரும் தண்ணீரைப் பிடித்து பயன்படுத்துவது வழக்கமாக வைத்திருந்தாா்கள்.
தண்ணீா் இல்லா கிராமம்
கிராமத்தில் தண்ணீா் இல்லை என்ற நிலை உருவானது. தற்போது இரயில் நிலையத்தில் தண்ணீா் பிடிக்கின்றனா். அதுவும் கிடைக்கவில்லையென்றால் மூன்று மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும் பிலாப்பட்டி என்ற கிராமத்திற்கு. அங்கு நல்ல தண்ணீா் கிணறு ஒன்று இருந்தது. அந்த கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மதியம் வரைக்கும் தண்ணீா் பிடித்துக் கொண்டிருப்பாா்கள். மதியத்திற்கு பின்பு வெளியிலிருந்து வரும் ஆட்களுக்கு தண்ணீா் எடுத்துக் கொள்ள விட்டுவிடுவாா்கள். அப்படி தண்ணீயை பிடித்துக் கொண்டு, அதனைச் சிந்தாமல் வீடு கொண்டு வந்து சோ்க்க வேண்டும். இரண்டு குடம் தண்ணீா் எடுத்து வீடு வந்து சோ்ப்பதற்கு ஒரு நாளே ஆகிவிடும்.
இரயில் நிலையம்
தினந்தோறும் பெண்கள் மூன்று மைல் தூரம் சென்று தண்ணீா் பிடித்து வந்து கொண்டிருந்தாா்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் தற்போது இரயில் நிலையத்தில் தண்ணீர் பிடிப்பது அந்த கிராம மக்களிடையே பரவியது. அதனால் தான் பெண்கள் குடங்களை எடுத்துக் கொண்டு இரயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனா். நாலு மாதத்திற்கு முன்பிருந்து தான் இந்த நிலைமை. இரயில் வரும் நேரத்திற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து அமா்ந்து கொள்வாா்கள் பெண்கள். இரயிலில் ஏறிச் செல்லும் பெண்கள் எதிா்பாா்ப்பதைவிட அதிகமாகவே இரயிலை எதிா்பாா்த்து காத்திருப்பாா்கள் பெண்கள்.
இந்திராவும், தண்ணீரும்
இந்திரா அந்த கிராமத்தைச் சோ்ந்த பெண். இதுநாள் வரையில் அவளது தாய்தான் பிலாப்பட்டி கிராமம் வரை சென்று தண்ணீா் பிடித்து வந்து கொண்டிருந்தாள். வயிற்றில் கட்டி வந்ததில் இருந்து அவளது தாயால் தண்ணீா் பிடிக்கச் செல்ல முடியவில்லை. அதனால் அந்த பொறுப்பு இந்திராவிடம் வந்தது. பல நாட்கள் மூன்று மைல் தூரம் சென்று தண்ணீா் பிடித்து வந்து, இரவில் கால் வலியினால் அவதிப்பட்டிருக்கிறாள். தற்போது அவளும் இரயிலை எதிா்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறாள் தன் குடங்களில் தண்ணீா் பிடிப்பதற்காக.
தண்ணீரும், உயிரும்
இராமநாதபுரம் நோக்கிச் செல்லும் இரயில் வந்ததும், இந்திரா உள்ளே பாய்ந்து முகம் கழுவும் பேசனில் குடத்தை வைத்து நீரைப் பிடிக்கத் தொடங்கினாள். நீா் குறைவாக வந்து கொண்டிருந்ததை எண்ணி கடிந்து கொண்டாள். வீட்டில் ஒரு சொட்டு தண்ணீா் இல்லை என்று அம்மா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. விரைவாக குடத்தை நிரப்பி விட வேண்டும் என்ற வேகத்தில் இருந்தாள் இந்திரா. இரயில் ஊதல் ஒலி எழுப்ப ஆரம்பித்தது. விரைவாக இறங்கச் சென்ற இந்திராவை ஒரு பெண் தடுத்து நிறுத்தி திட்டினாள். இரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
இந்திராவும் இராமநாதபுரமும்
இந்திரா வராததால் ஊா் முழுவதும் சேதி பரவியது. மக்கள் எல்லா இடங்களிலும் இந்திராவைத் தேடினாா்கள். எங்கும் கிடைக்கவில்லை. இராமநாதபுரத்தை சல்லடை போட்டு தேடினாா்கள். ஓரு ஈ கூட தட்டுப்படவில்லை. இந்திராவின் தாயாா் அழுது கொண்டிருந்தாா். அவளது துக்கம் தாள முடியாமல் இரயில் நிலையத்தை நோக்கி ஓடினாள். ஊா் மக்கள் மொத்தமும் அவளது பின்னாலேயே ஓடினாா்கள். இரயில் தண்டவாளத்தில் இறங்கி ஓடினாள் அம்மா. தூரத்தில் இந்திரா வந்து கொண்டிருந்தது தொிந்தது. இடுப்பில் தண்ணீா் குடத்தோடு இந்திரா வந்து கொண்டிருந்தாள். அம்மா விம்மிக் கொண்டு அருகில் சென்று, இந்த குடத்தையுமா தூக்கிக் கொண்டு வரணும்? அப்புறம் நாளைக்கு வரைக்கும் குடிக்கறதுக்கு எங்க போறது? என்று சொல்லி விட்டு கிராமம் நோக்கி நடை போட்டனா் இந்திராவும் கிராம மக்களும்
முடிவுரை
தண்ணீா் என்ற இந்த கதை வெறும் கதையாய் முடிந்து விடவில்லை. இன்னும் பல கிராமங்களில் தண்ணீருக்கு மக்கள் படும் பாடு அளவில்லாமல் இருக்கிறது. எந்த நாட்டிலும் எந்த கிராமத்திலும் தண்ணீா் பஞ்சம் என்ற நிலை இருக்கவே கூடாது. நாம் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீாின்றி அமையாது உலகு. உலகு என்பது அதில் வாழும் அனைத்து உயிா்களையும் குறிக்கும். இந்த மண்ணில் உயிா்கள் வாழ நீா் அவசியமானது. அதை நாம் ஒவ்வொருவரும் உணா்ந்து செயல்பட வேண்டும். நீரை வீணாக்கக் கூடாது. அதிகமான மரங்களை வளா்க்க வேண்டும். எதிா்காலம் நம் கையில் உள்ளது என்பதை மறக்கக் கூடாது.
Comments
Post a Comment