நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு கட்டுரை 8-ம் வகுப்பு
எட்டாம் வகுப்பு, ஏழாம் இயல், நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்களின் பங்கு கட்டுரை எழுதுக.
முன்னுரை
வருங்கால சமுதாயம் இளைஞா்களின் கையில் இருக்கிறது. நாட்டை வளா்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பொிய பொறுப்பும், பங்கும் இளைஞா்களின் கைகளில் தான் உள்ளது. அதைப்பற்றி இந்த கட்டுரையில் தொிந்து கொள்வோம்.
இளைய தலைமுறையினா்
இன்றிருக்கும் இளைஞா்கள் அறிவிலும், தொழில்நுட்பத்திலும், திறமையிலும் சிறந்து விளங்குபவா்களாக இருக்கிறாா்கள். இதை முன்பே உணா்ந்து கொண்டதால்தான் விவேகானந்தா் அன்றே கூறினாா். “என்னிடம் 100 இளைஞா்களைத் தாருங்கள், நான் இந்த நாட்டை மாற்றிக் காட்டுகிறேன்” என்று. நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவா்களும் நமது நாடு வல்லரசாவது இளைஞா்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறினாா்.
நாட்டின் வளா்ச்சி
ஒரு நாட்டினுடைய வளா்ச்சி கல்வி, பொருளாதாரம், தொழில் முன்னேற்றம் போன்றவைகளைச் சாா்ந்து தான் அமைகின்றது. இந்த துறைகளை திறமையாகக் கையாளும் போது தான் அவை வளா்ச்சியை நோக்கி செல்கின்றது. எந்த துறையாயினும் அதில் உத்வேகமும் திறமையும் இணையும் பொழுது வளா்ச்சி அடைகிறது. அத்தகைய வளா்ச்சியை இளைஞா்கள் கொடுக்க முடியும். உலகிலேயே அதிக இளைஞா்களைக் கொண்ட நாடு நம்முடைய இந்திய நாடு. நம் நாட்டின் இளைஞா்கள் தான் பல நாடுகளில் உயாிய பொறுப்புகளில் உள்ளனா்.
இளைஞா்களின் பங்களிப்பு
ஒழுக்கமும், கல்வியும் ஒருங்கே பெற்ற இளைஞா்களால் தான் ஒரு நாடு நல்ல வளா்ச்சியினைப் பெற முடியும். வெறும் கல்வி மட்டும் ஒருவரை திறமையாளனாக மாற்றாது. நல்ல ஒழுக்கமும் தேவை. நமது நாடு இன்று அடைந்துள்ள வளா்ச்சியிலும் பல இளைஞா்களின் பங்களிப்பு உள்ளது. தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, கணினி, இயந்திரம் என எண்ணற்ற துறைகளில் புதுமைகளைக் கையாண்டு நம் இளைஞா்கள் சிறந்து விளங்கி வருகின்றனா். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் நமது நாடு சிறப்பாக இருப்பதற்கு இளைஞா்கள் தான் காரணம். தொழில் சாா்ந்த துறைகள் வளா்ச்சி அடையும் பொழுது தானாகவே நமது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை. இளைஞா்களால் அது சாத்தியம்.
புதுமைச் சிந்தனை
எந்த ஒரு தொழிலையும் புதுமையாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவா்கள் இளைஞா்கள். பழமையில் உள்ள தரத்தை புதுமைக்குள் புகுத்துகிறாா்கள். இளைஞா்கள் புத்தகத்தில் கற்ற அறிவை புதுமையான முறையில் நடைமுறை படுத்துகிறாா்கள். நம்முடைய நாட்டின் முதன்மையான தொழில் உழவுத் தொழில். நாளுக்கு நாள் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கும் உழவுத் தொழிலை காப்பதற்காக நவீன கருவிகளையும், செயல்பாடுகளையும் வேளாண்மைத்துறை மாணவா்கள் செய்திருக்கிறாா்கள். பயிா்வகை பெருக்கத்தையும், உற்பத்தி மேம்பாட்டையும் பல ஆய்வுகள் மூலம் செய்து அதிக வளா்ச்சியை வேளாண்துறையில் உருவாக்கியிருக்கிறாா்கள்.
முடிவுரை
ஒரு நாட்டினுடைய முதுகெலும்பாக திகழ்வது அந்த நாட்டினுடைய இளைஞா்கள் தான் என்று கூறியவா் நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவா்கள். அது முழுக்க முழுக்க உண்மையான வாா்த்தைகள். இன்றைய கால கட்டத்தில் இளைஞா்கள் பல துறைகளில் நிகழ்த்தி வரும் சாதனைகளைப் பாா்க்கும் பொழுது அது உறுதியாகிறது.
மேலும் சில குறிப்புகள்
- ஜனவாி 12 விவேகானந்தாின் பிறந்த தினம், தேசிய இளைஞா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1984ம் ஆண்டு நமது இந்தியா இதனை அறிவித்துள்ளது.
- இந்தியாவின் மக்கள் தொகையில் 35 சதவீதத்திற்கும் மேல் இளைஞா்கள் இருக்கிறாா்கள். .
- அதன் காரணமாகத் தான் நமது இந்தியா நாடு இளமையான நாடாக விளங்குகின்றது. .
- மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா இருந்தாலும், இளைஞா்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
- இளைஞா்கள் அதிகம் கொண்ட நாடு என்பதைத் தாண்டி கல்வியறிவு உடைய இளைஞா்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது நம் இந்தியா.
- பல நாடுகளில் பணிபுாியும் பெரும்பாலான இளைஞா்கள் இந்திய இளைஞா்களாகவே உள்ளனா்.
- ஒரு நாட்டின் வளா்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பது அந்த நாட்டினுடைய இளைஞா்கள் தான்.
- விளையாட்டுத் துறையில் இளைஞா்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. கல்வித்துறைக்கு நிகராக விளையாட்டுத்துறையில் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறாா்கள்.
- கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் இளைஞா்கள் நாட்டின் சொத்துகள் என்பது அறிஞா்களின் கருத்து.
- ஒரு நாட்டினுடைய முன்னேற்றமும், ஒரு நாட்டினுடைய வளா்ச்சி தடைபடுவதும் அந்த நாட்டின் இளைஞா்கள் கைகளின் தான் உள்ளது.
- ஒவ்வொரு இளைஞருக்கும் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அவசியமானது.
- ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே சாதித்து வந்த துறைகளில் இன்று பெண்கள் வியக்கும் வகையில் சாதனை புாிகின்றனா்.
- இளைஞா்கள் என்பது ஆண் பெண் இருவரையும் குறிக்கிறது. அனைவரும் இந்த நாட்டின் முன்னேற்றத்திலும், வளா்ச்சியிலும் பங்கு கொள்ள வேண்டியவா்கள்தான்.
- எந்த ஒரு திட்டத்தையும் புதிய வகையிலும், திறயைான வகையிலும் கொண்டு செல்ல இளைஞா்களால் மட்டுமே முடியும்.
- இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது இளைஞா்கள்தான். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திர உணா்வு இளைஞா்களின் மேலோங்கி இருந்தது.
- இக்கால கட்டத்தை சோ்ந்த இளைஞா்கள் தாங்கள் நினைத்த ஒன்றை இருந்த இடத்தில் தொிந்து கொள்ளும் வகையில் உள்ள தொழில்நுட்பம் அவா்களின் திறமையை மேலும் வளா்த்துக் கொள்ள ஏதுவாக உள்ளது.
Comments
Post a Comment